Tuesday, August 23, 2011

அன்னா ஹசாரே யார்?


30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே !


இன்று இந்திய மக்கள் அனைவரையும் தன் பக்கம் திருப்பி, ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே யார்? இவருடைய கடந்த காலம் எப்படி இருந்தது? ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை இவர் எப்போது துவக்கினார்? இந்த கேள்விகளுக்கு இதோ விடை:
விவேகானந்தரின் புத்தகத்தை படித்தார்: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து உயிரையும் விடத் தயாராக இருக்கும் அன்னா ஹசாரே, ஒரு கட்டத்தில் தற்கொலை‌ செய்து கொள்ள முடிவு செய்தார். வாழ்க்கையில் விரக்தி அடைந்து, மனித பிறவிக்கு அர்த்தம் காண முடியாமல் இந்த முடிவை எடுத்தார். தனது தற்கொலைக்கு என்ன காரணம் என்று இரண்டு பக்க கடிதமும் எழுதி வைத்திருந்தார். அந்தச் சூழ்நிலையில் அவர் டில்லி ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் ஒரு புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்ததும் அவருடைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. மனித சமுதாயத்திற்கு சேவை புரியவே இந்த மனிதப் பிறவி என்பதை அவர் அ‌தன் மூலம் உணர்ந்து கொண்டார். அவருடைய வாழ்க்கையும் மாறியது.
ராணுவத்தில் பணியாற்றி விவசாயிகளுக்காக போராடியவர் : இளைஞராக இருந்தபோது இந்திய ராணுவத்தில் சேர்ந்த அன்னா ஹசாரே, 15 ஆண்டுகள் அதில் பணியாற்றி உள்ளார். 1978ல் விருப்ப ஓய்வு பெற்ற அவர், தமது 39வது வயதில் மகாராஷ்டராவில் உள்ள தமது சொந்த கிராமத்திற்குச் சென்றார். அங்கு விவசாயிகள் படும் பாட்டைக் கண்டு அவர்களுக்கு உதவ ஆரம்பித்தார். அங்கு அவர் துவக்கி மழைநீர் சேமிப்பு திட்டம், அந்த குக்கிராமத்தை ஒரு மாதிர கிராமமாக மாற்றியது. அவருடைய போராட்டங்கள் காரணமாக அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைந்தது; மின்சாரம் வந்தது; விவசாயிகளுக்கான நலத்திட்ட்ங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கிராம மக்கள் அவரைப் போற்றத் தொடங்கினர்.
பல அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பிய பெருமை உண்டு : ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் போராட்டம் இங்கேதான் துவங்கியது. கிராமப்புற வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஊழலை எதிர்த்து அவர் போராடத் துவங்கினார். இதற்காக ஒரு இயக்கத்தையும் துவக்கினார். அவருடைய பிரதான ஆயுதமாக உண்ணாவிரதமே இருந்தது; அரசியல்வாதிகளைக் குறி வைத்தே போராட்டங்களை நடத்தினார்.
மகாராஷ்டிர அரசியல்வாதிகளான சரத் பவார் மற்றும் பால் தாக்கரே, இவருடைய போராட்டங்களைக் குறை கூறி வந்தனர். ஆனால் அன்னா ஹசாரேயின் ஆயுதம் வலுவானதாக இருந்ததால் 1995- 96ல் அப்போதைய சிவசேனா- பா.ஜ., அரசு, 2 ஊழல் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிதாயிற்று; 2003ம் ஆண்டு, காங்கிரஸ்- தேசியவாத அரசு, 4 அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டியதாயிற்று.
இவ்வாறு மாநில அளவில் ஊழல் எதிர்ப்பு போரில் வெற்றி பெற்ற அன்னா ஹசாரே தற்போது தேசிய அளவில் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தைத் துவக்கி மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறார்.



No comments:

Post a Comment

வாங்க நண்பரே.வருகைக்கு மிக்க நன்றி.தங்கள் மேலான கருத்தை கீழே பதியவும்.